×

வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர் பழுதால் வீணாகும் மழைநீர்

சிவகாசி, பிப். 5: வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர் பழுதால், நீர்க்கசிவு ஏற்பட்டு மழைநீர் வீணாகி வருகிறது. சிவகாசி அருகே, வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் 7.5 மீட்டர் ஆகும். இந்த அணை மூலம் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. சிவகாசியின் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து தினசரி 25 லட்சம் லிட்டர் எடுத்துச் செல்லப்படுகிறது. அணையை சுற்றியுள்ள  பகுதியில் கிணற்று பாசனத்தில் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. வடகிழக்கு பருவமழையால்  அணையின் நீர்மட்டம்  4 மீட்டராக உள்ளது.

இந்நிலையில், அணையில் உள்ள 5 ஷட்டர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. அணையின் முதலாவது ஷட்டரில்  3 இடங்களிலும், 4வது ஷட்டரில் 2 இடங்களிலும் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அணையில் தேக்கி வைத்துள்ள மழைநீர் வீணாகி வருகிறது. அணை நீரை நம்பி விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். நாற்று நடவு பணிகள் தற்போது முடிந்துள்ளன. அறுவடைக்கு 6 மாத காலம் ஆகும். ஷட்டர் நீர்க்கசிவால், தண்ணீர் வீணாகி விடுமோ என விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே, வெம்பக்கோட்டை அணை ஷட்டரில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சீரமைக்க, பொதுப்பணித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vembakkottai Dam ,
× RELATED வெம்பக்கோட்டை அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடியாக நீர் வெளியேற்றம்..!!