×

போடிமெட்டு அருகே மலைச்சாலையில் விரிவாக்க பணி தீவிரம்

போடி, பிப். 5: தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் நெடுஞ்சாலையாக தனுஷ்கோடி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் மூணாறிலிருந்து லாக்காடு, தேவிகுளம், கேப்ரோடு, முட்டுக்காடு, சின்னக்கானல் பிரிவு, யானை இரங்கல், மூலத்துறை, பூப்பாறை வரை குறுகிய மலைச்சாலையில் விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் பாலங்கள், தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போடி அருகே, தமிழக-கேரள எல்லையில் இருந்து பூப்பாறை வரை 11 கி.மீ விரிவாக்கப்பணி கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணி தொடங்கிய இரண்டு மாதத்தில், சாலை விரிவாக்கம் செய்யும் மதிகெட்டான் சோலை, வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட சோலைவனம் என கேரளா உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியது. இதையடுத்து 6 மாதமாக பணிகள் நடக்காமல் முடங்கியிருந்தது. பிறகு சில குறிப்பிட்ட சோலைப்பகுதிகளை விட்டுவிட்டு மற்ற இடங்களில் பணிகள் தொடங்க, நெடுஞ்சாலைத்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினர். கடந்த சில மாதங்களாக விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகளும், கேரளாவுக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Bodimettu ,mountain road ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...