×

சிறுவர்களை வேலைக்கு வைத்தால் அபராதம் தொழிலாளர் துறை அதிகாரி எச்சரிக்கை

காரைக்குடி, பிப்.5: காரைக்குடி கல்லுகட்டி, செக்காலை ரோடு உள்பட 30க்கும் மேற்பட்ட கடைகளில் தொழிலாளர் துறை உதவிஆணையர் ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் சேதுராஜ், செந்தில், ராம்மோகன், கதிரவன் மற்றும் சைல்டுலைன் ஆகியோர் ரெய்டு நடத்தினர். இதில் 4 கடைகளில் பணியாற்றிய 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சிறுவர்களை போலீஸ் வேனில் ஏற்றியதால் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேலைக்கு வைத்திருந்த கடைகள் மீது நடவடிக்கை எடுத்து சிறுவர்களை இறக்கிவிட வேண்டும் என வலியுறுத்தியதன் பேரில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உதவி ஆணையர் ராஜ்குமார் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15ம் தேதி வரை ஆய்வு செய்யவுள்ளோம். 15 முதல் 18 வயதுக்குள் கடைகளில் வேலைக்கு வைத்திருந்தால் அந்தந்த தொழிலாளர் துறை ஆய்வாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.6 மணி நேரத்துக்கு மேல் வேலைபார்க்க அனுமதிக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இதனை மீறி வேலைக்கு வைத்திருந்தால் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பள்ளி விடுமுறை என்பதால் வேலைக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுதவறானது வேலைக்கு சென்று பழகினால் படிக்க மாட்டார்கள் என்றார்.

Tags : Labor Department ,boys ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தினத்தில்...