திருப்பாலைக்குடியில் பயமுறுத்தும் புயல் காப்பக கட்டிடம் இடிந்து விழும் அபாயம்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.5: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் சேதமடைந்த புயல் காப்பகத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனை இடித்து தரைமட்டம் செய்ய வேண்டும் அல்லது சீரமைத்து மாற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி கிராமத்தில் புயல், மழை போன்ற இயற்கை சீற்றத்தின் போது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் புயல் காப்பகம் கட்டப்பட்டது. இயற்கை சீற்றம் இருக்கும் போதெல்லாம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்க வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்தது. எனவே பல கோடி ரூபாய் மதிப்பில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பல்நோக்கு சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக புயல் அறிவிப்பு வந்த காலகட்டங்களில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இங்கு தான் தங்க வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே பழைய சேதமடைந்த புயல் காப்பக கட்டிடம் அப்படியே நிற்கிறது. இது இடிந்து விழுந்தால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை இடித்து அகற்ற வேண்டும் அல்லது சீரமைத்து மாற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மக்கள் கூறுகையில், ‘‘புயல் காப்பகம் பழுதடைந்ததை காரணம் காட்டிதான் கோடி கணக்கில் செலவு செய்து புதிய பல் நோக்கு சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட பின்னரும் பழைய புயல் காப்பகத்தை தரைமட்டமாக்காமலோ அல்லது சீரமைக்காமலோ இருப்பது மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அந்த புயல் காப்பக கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக பெயர்ந்து விழுந்து வருவதுடன், நாளுக்கு நாள் கூடுதலாக பழுதடைந்து வருகிறது. அப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடமாடும் பகுதியாக உள்ளது. எனவே இந்த கட்டிடம் இடிந்து விழுந்துவிட்டால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன் கட்டிடத்தை இடித்து தரைமட்டம் செய்ய வேண்டும். இல்லை எனில் கட்டிடத்தின் உறுதித்தன்மையை கண்டறிந்து நன்றாக இருக்கும் பட்சத்தில் பழுது பார்த்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.  

Related Stories:

>