×

புதிய நிர்வாகிகள் தேர்வால் கட்சி தொண்டர்கள் கொந்தளிப்பு அமைச்சர் செல்லூர் ராஜூ மீது குவியும் புகார்கள்

மதுரை, பிப். 5: மதுரை மாநகர் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதால், தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூ மீது கட்சியின் தலைமை கழகத்திற்கு புகார் மனுக்கள் குவிந்து வருகிறது.   மதுரை மாவட்ட அதிமுகவில், மதுரை மாநகராகவும், புறநகர் பகுதிகளை மதுரை கிழக்கு, மதுரை மேற்கு என மொத்தம் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  மதுரை மாநகரில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த 2007 முதல் இருந்து வருகிறார். கட்சியில், மாநகரில் உள்ள வார்டுகளில், வட்ட செயலாளர், பிரதிநிதி, துணை, இணைச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் என 200க்கு மேற்பட்ட கட்சி பதவிகள் காலியாக உள்ளன. இதுவரை இப்பதவிக்கு என யாரையும் முன்பு நியமிக்கப்படவில்லை.  இந்நிலையில், மாவட்ட செயலாளரான அமைச்சர் செல்லூர் ராஜூ, தனக்கு ஆதரவாளர்களை கட்சி பதவிக்கு தன்னிச்சையாக நியமிக்க தொடங்கியுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் இடையை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையாக உழைக்கு தொண்டர்களுக்கு பதவி இல்லை. தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும், புதியவர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கிறார். அதுவும் தேர்தல் நேரத்தில் இதுபோன்று செயலில் ஈடுபடுகிறார் என அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இதுகுறித்து கட்சியின் தலைமைக்கு புகார் சென்றுள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கட்சியில் மாநகரில், பல்வேறு பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் அவற்றை முறையாக தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்திருக்கலாம். அதை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்ய தவறிவிட்டார். தற்போது மாற்றுக்கட்சியில் இருந்து வந்து, ஒரு சில மாதமேயான நபர்களுக்கு அமைச்சர் கட்சி பதவி கொடுக்கிறார். இதனால், எம்.ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் உண்மையான விசுவாசிகளுக்கு பதவி கொடுக்க மறுக்கிறார். அமைச்சரின் நடவடிக்கையால், தற்போது, ஒவ்வொரு வார்டிலும் அதிமுகவில், நிர்வாகிகள் ஓரு கோஷ்டியாகவும், பழைய நிர்வாகிகள் ஒரு கோஷ்டி, உண்மையான தொண்டர்கள் ஒரு கோஷ்டி என பிரிந்து நிற்கிறோம். பலரும் எதிர்கட்சியை தேடும் நிலையை, அமைச்சரே ஏற்படுத்தியுள்ளார். தேர்தல் வர உள்ள இந்நிலையில், அமைச்சர் கட்சி பதவி வழங்குவது தேவையற்றது. இது அதிமுக தொண்டர்கள் இடையை மோதலையும், விரோதத்தையும் உருவாக்கும். அமைச்சரின் இந்த நடவடிக்கை குறித்து தலைமை கழகத்திற்கு புகார் அனுப்பியுள்ளோம். கட்சி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் அதிமுகவினர் தேர்தல் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும். இது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்’’ என்றனர்.

Tags : riot ,Party ,Cellur Raju ,
× RELATED கூட்டத்திற்கு நடுவே எழுந்துபோனால்...