பழநி, பிப். 5: பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா கடந்த 22ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடைபெற்றது. தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி ஸ்ரீ பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்றாகும். கடந்த 361 ஆண்டுகளுக்கு மேலாக இக்காவடி குழுவினர் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. பழநி வந்தடைந்த இக்குழுவினருக்காக அடிவார பகுதியில் 25 ஆயிரம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. கொரோனா காரணமாக 500 பேர் மட்டுமே பழநி கோயிலில் இரவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இக்குழுவின் சார்பில் மலைக்கோயிலில் சுமார் 300 கிலோ அளவுள்ள சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, ரோஸ், மரிக்கொழுந்து, மருது, மல்லி, ஆஸ்திரேலியா பூ ஆகியவற்றை கொண்டு ஓம் வடிவம், சரவணபவ, தாமரைப்பூ வடிவங்கள் வரைந்து, தீப ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் மலைக்கோயிலில் 60 படிகளுக்கு மஞ்சள் தெளித்து, பத்தி- சூடம் ஏற்றி படிபூஜை நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.