லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரின் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர் லால் பகதூர் யாதவ் சென்ற கார் மீது 1,000 கிலோ எடையுள்ள உயர் கம்பம் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பாபுகஞ்ச் சந்தைக்கு அருகில், பெட்ரோல் பம்ப் அருகே, தொழிலாளர்கள் உயர் கம்பம் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. 1,000 கிலோ கம்பம் திடீரென சமநிலையை இழந்து, கடந்து சென்ற கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. அதிக எடைகொண்ட உயர் கம்பம் நிறுவும் போது பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அதுவே விபத்துக்கு காரணம் என அந்த பகுதிமக்கள் கூறுகின்றனர்.
இறந்த லால் பகதூர் யாதவ் (47), 2022 நகர் பஞ்சாயத்து தேர்தலில் அந்துவில் போட்டியிட்டார், மேலும் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர். அவர் பொதுப்பணித் துறை (PWD) ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். மேலும் நாட்டு மதுபான உரிமத்தையும் வைத்திருந்தார்.
