×

கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் எடுப்பதில் தகராறு அதிமுகவினர் கோஷ்டி மோதல்: அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல்: தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட துரைசாமி மார்க்கெட் பகுதி, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி அங்காடிகள், சாலையின் இருபுறமும் உள்ள தற்காலிக கடைகளுக்கு தரை கட்டணம்,
கழிப்பிடத்திற்கு கட்டணம், மார்க்கெட் பகுதிக்குள் சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றுக்கு நேற்று நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தம் விடப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடப்படும் இந்த ஒப்பந்தங்களுக்கு, இந்த முறை மொத்தம் 8 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில், நகராட்சி ஆணையர் சித்ரா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தத்தை ஏலம் விட்டனர். இதில் நகராட்சிக்குட்பட்ட துரைசாமி மார்கெட் பகுதி, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி அங்காடிகள், சாலையின் இருபுறமும் உள்ள தற்காலிக கடைகளில் தரை கட்டணம் வசூலிப்பதற்கு முத்தையன் என்பவர் அதிகபட்சமாக ₹16 லட்சத்து 42 ஆயிரத்து 500ஐ நிர்ணயம் செய்து இருந்ததால் அந்த ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், துரைசாமி மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலிப்பதற்கு, தாம்பரம் அதிமுக வர்த்தக அணி செயலாளர் பழக்கடை சங்கர் தனது மனைவி சுமதி பெயரில் 6 லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயம் செய்து இருந்ததால் அந்த ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது. மார்க்கெட் பகுதிக்குள் சரக்கு ஏற்றி, இறக்கும் வாகனங்களில் கட்டணம் வசூலிப்பதற்காக, சுரேஷ் என்பவர் ₹7 லட்சத்து 86 ஆயிரத்து 600ஐ நிர்ணயம் செய்து இருந்ததால் அந்த ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில், கழிப்பிடத்திற்கு கட்டணம் வசூலிக்க குறைவான தொகை நிர்ணயித்த மற்றொரு ஒப்பந்ததாரரான செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக பொருளாளர் பரசுராமன், ஒப்பந்தம் எடுத்த தாம்பரம் அதிமுக வர்த்தக அணி செயலாளர் பழக்கடை சங்கரிடம் நகராட்சி அலுவலகத்திலேயே தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார்.  

சிறிது நேரத்தில் பரசுராமனின் மகன் ஜெய், 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து பழக்கடை சங்கரை வெளியே வந்தால் வெட்டி விடுவேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து அடிக்க பாய்ந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் ஜெய் தரப்பினரை தடுத்து, சம்பவம் குறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். ஒப்பந்தம் எடுத்ததில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடாவடியாக அதிக கட்டணம்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அதிமுக மாவட்ட பொருளாளர் பரசுராமன் கடந்த 2019ம் ஆண்டு தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திருமண மண்டபத்தின் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றார். ஆனால் ஒப்பந்தம் எடுத்த நாள் முதல் மண்டபத்தை  சரியாக பராமரிக்கவில்லை. மேலும், மண்டபத்தை பதிவு செய்பவர்களிடம் மண்டப அலங்காரம், கேட்டரிங், ஷாமியானா பந்தல் அமைப்பது, பாப்கான், பீடா, ஐஸ்கிரீம் என மண்டபம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தன்னிடம் தரவேண்டும் என வற்புறுத்தி, அதற்கு அடாவடியாக அதிக கட்டணம் வசூலித்து வந்தார்.

இதுகுறித்து தாம்பரம் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஆண்டு, மீண்டும் மண்டப பராமரிப்பு பணிகளை பரசுராமனுக்கு வழங்கியுள்ளனர். கழிப்பறை கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தையும் எடுத்து அடாவடித்தனம் செய்ய முயற்சித்து அந்த ஒப்பந்தம் கிடைக்காததால் அதிமுகவினர் கொலை மிரட்டல் விடும் அளவிற்கு அவர் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.


Tags : clash ,AIADMK ,Slaves ,office ,Tambaram ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...