×

மாஜி ஊராட்சி தலைவர் மைத்துனர் கொலை விவகாரம்: சரணடைந்த 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

திருவள்ளூர்: திருவள்ளுர் அடுத்த மேல்மணம்பேடு முன்னாள் ஊராட்சி தலைவரின்  மைத்துனர் கொலை வழக்கில் சரணடைந்த 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேல்மணம்பேடு ஊராட்சி. இப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கராஜ், அவரது தம்பி வெங்கட்ராமன் ஆகியோர் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்கனவே கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இருதினங்களுக்கு முன் மாலையில் தங்கராஜின் மைத்துனரான முருகேசன் மகன் கருணாகரன்(45) தனது வீட்டின் வெளியே நின்றிருந்தபோது அவ்வழியாக கார் மற்றும் பைக்குகளில் வந்த கும்பல், கருணாகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தயாராக இருந்த வாகனங்களில் தப்பினர்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இக்கொலை சம்பந்தமாக வெள்ளவேடு விஸ்வா என்ற விமல்(19), தமிழ்ச்செல்வன்(20), திருமழிசை சரவணன்(20), அஸ்வின்குமார்(23), திருவள்ளூர் இளமுருகன்(22) ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வெள்ளவேடு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Panchayat leader ,nephew ,
× RELATED பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு...