×

முகத்துவாரத்தில் விடப்படும் கழிவுநீரால் மிதக்கும் பாசி: மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம்

திருப்போரூர்: முகத்துவாரத்தில் விடப்படும் கழிவுநீரால் மிதக்கும் பாசியால், மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர். திருப்போரூரில் இருந்து நெம்மேலி வரை ஓஎம்ஆர் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலையின் இரு புறமும் முகத்துவாரம் அமைந்துள்ளது. இந்த முகத்துவாரம் முட்டுக்காடு பகுதியில் கடலுடன் சேருகிறது. இந்த முகத்துவாரத்தில் அரிய வகை மீன்கள், இறால், நண்டு ஆகியவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. கடந்த சில மாதங்களாக கேளம்பாக்கம், திருப்போரூர், தையூர் பகுதிகளில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் முகத்துவாரத்தில் கழிவுநீர் லாரிகள் மூலம் விடப்படுவதால் உப்பு நீரில் பாசி படர்ந்து மிதக்கிறது.

இதையொட்டி, தண்ணீரின் தன்மை மாறி இறால் குஞ்சுகள், நண்டு போன்றவை இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை முகத்துவாரத்தில் இதுபோன்று பச்சைப்பாசி படர்ந்த நிலையில் இருந்தது இல்லை என மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். ஓஎம்ஆர் சாலையில் கழிவுநீர் வெளியேற்றத்துக்கு மாற்று வழி காணாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் மவுனம் காப்பதால், லாரிகள் மூலம் கழிவுநீர் முகத்துவாரத்தில் விடப்பட்டுகிறது. இதனால், தண்ணீர் கெடுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் கழிவுநீர் அகற்றும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டு இயற்கையான முகத்துவாரத்தை பாதுகாக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு...