×

புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு வெளியே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி விவசாயிகள், வியாபாரிகள் மறியல்

புதுக்கோட்டை, பிப். 4: புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி விவசாயிகள், வியாபாரிகள் ஒன்றுகூடி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கக்கூடிய காய்கறிகளை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு அரசு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உழவர் சந்தைக்கு வெளியே தனியார் சிலர் இடங்களை ஆக்கிரமித்து தரைக்கடைகளையும், தள்ளுவண்டியில் கடைகளை போட்டுள்ளனர்.

இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள், தங்களுடைய வாகனங்களை நிறுத்த முடியாமல் இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் உழவர் சந்தைக்குள் உள்ள கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகள், வியாபாரிகள் எடுத்து கூறியும், மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் உழவர் சந்தையில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

உழவர் சந்தைக்கு வெளியே இடங்களை ஆக்கிரமித்து அமைத்துள்ள கடைகளையும், தள்ளுவண்டி கடைகளையும் அகற்ற வலியுறுத்தி புதுக்கோட்டை உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் ஆர்டிஓ தண்டாயுதபாணி சம்பவ இடத்துக்கு சென்று சமாதான பேச்சுவார்தை நடத்தினார். அதன்பின் ஆக்கிரமிப்பில் இருந்து கடைகளை அகற்ற ஆர்டிஓ தண்டாயுதபாணி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. மேலும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags : traders ,removal ,shops ,Pudukkottai Farmers' Market ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி