பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சட்டநகல் எரிப்பு போராட்டம்

பெரம்பலூர், பிப்.4:  தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், மின்சார சட்ட மசோதா 2021ஐ திரும்பப் பெற வேண்டும். தனியார் மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அனைத்து கட்டிட, உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் உள்ள மக்கள் விரோத, தொழிலாளர் விரோத அம்சங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பாக சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகே நடந்த போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார். தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, ஏஐடியூசி மாவட்ட தலைவர் தியாகராஜன், எச்.எம்.எஸ் நிர்வாகி சின்னசாமி, ஓய்வுபெற்ற அலுவலர் நலஅமைப்பு நிர்வாகி கிருஷ்ணசாமி, ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி ரெங்கநாதன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகிலஇந்திய விவசாயிகள் போராட்டக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎப், எச்எம்எஸ், ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எம்எல்எப், மத்திய, மாநில தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த பன்னீர்செல்வம், ரெங்கநாதன், சண்முகம், நாராயணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டவாறு சட்டநகலை எரிக்க முயன்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ் பெக்டர்ராம்குமார் உள்ளிட்ட போலீசார் அவர்களை தடுத்து நகலை பிடுங்கி கிழித்தெறிந்தனர். இதனால் தொழிற்சங்கத்தினர் மீண்டும் மீண்டும் சட்ட நகலைக் கொண்டு வந்து கிழித்தனர். இதனால் பஸ்டாண்டு முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories:

>