×

பாலியலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு உதவ மாநகர காவல்துறை சார்பில் தோழி திட்டம் தொடக்கம்: போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்

சென்னை: பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் தோழி என்ற திட்டத்தை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகர காவல் எல்லையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலையங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம் புகார்கள்  வருகிறது. புகாரின்படி அனைத்து மகளிர் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று மன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன்  வாழ பாதுகாப்பு வழங்கிட மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி தோழி என்ற திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்த திட்டத்தையும், அதற்கான குறும்படத்தையும் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான  குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, நடிகர் தாமு மற்றும் 35 அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். தோழி திட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் வகையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள 2 பெண் காவலர்கள் வீதம் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்  பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஆலோசனைகள் வழங்குவார்கள்.
இதனால் தேர்வு செய்யப்பட்டுள்ள 70 பெண் காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதைதொடர்ந்து 70 பெண் காவலர்களும் அவரவர் காவல் நிலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

Tags : Launch ,Metropolitan Police ,Help Children and Women Affected ,Commissioner of Police ,Sex ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...