×

குழித்துறை நகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு விதிமுறை மீறி கட்டணம் வசூல்

மார்த்தாண்டம், பிப்.4 : குமரி  மாவட்டத்தில் அனைவருக்கும் சிறிய, நடுத்தர அபிவிருத்தி திட்டம் சுழற்சி  நிதி  திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்பு  வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி குடிநீர் இணைப்பு கேட்டு  விண்ணப்பிக்கும் மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம்,  டெபாசிட் தொகை, சாலை சீரமைப்பு கட்டணம்,  இணைப்பு  பொருட்கள், பணியாளர் செலவு ஆகியவற்றை 10 பாகமாக பிரித்து அடுத்த 5  ஆண்டுகளில் வீட்டு வரி செலுத்தும்போது அதனுடன் சேர்ந்து செலுத்த வேண்டும்.  இணைப்பு  கொடுக்கும் போது ஆகும் அனைத்து செலவுகளையும் அரசு செய்யும் என   உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குழித்துறை நகராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்பு  கேட்டு விண்ணப்பிக்கும்போது, இத்திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்குவதாக  பணியாணை வழங்கப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து  கட்டணங்களையும் ஒரே முறையாக செலுத்த அதிகாரிகள் கூறுகின்றனர். முழு கட்டண  தொகையையும் செலுத்தினால் தான் இணைப்பு வழங்குகின்றனர். இது அரசு  உத்தரவுக்கு எதிராக உள்ளது.

நகராட்சியின் நிர்வாக குளறுபடி காரணமாக  கஜானா காலியாக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக முழு  தொகையையும் செலுத்த கூறுகின்றனர். மேலும் அரசு உத்தரவுபடி கட்டணம்  வசூலித்தால்  மறைமுக வசூலும்  கிடைக்காமல் போகும். எனவே அதிகாரிகள் விதிமுறைகளை மீறி ஒரே நேரத்தில் முழு  கட்டணத்தையும் செலுத்த சொல்வதாக கூறப்படுகிறது.  இது குறித்து குழித்துறை நகர  தேமுதிக செயலாளர் ஜாண் பிரிட்டோ கூறியதாவது: குழித்துறை நகராட்சியில் 5  ஆயிரத்துக்கும் அதிகமாக குடிநீர் இணைப்புகள்  உள்ளன. இணைப்பு கட்டணம் எல்லா  நகராட்சியையும் விட இங்கு அதிகம். புதிய நடைமுறைகளை மக்களுக்கு  தெரிவிக்காமல் பழைய முறைபடியே முழு கட்டண  தொகையையும் ஒரே நேரத்தில் வசூலிக்கின்றனர். பணம் கொடுத்தால்தான் குடிநீர்  இணைப்பு கொடுக்கின்றனர். அது தொடர்பாக அதிகாரிகளிடம்  கேட்டால் சரியான பதில் அளிக்காமல் முழு தொகையையும் செலுத்தினால் தான்  இணைப்பு வழங்கப்படும் என கூறி அனுப்பி விடுகின்றனர். குடிநீர் இணைப்பு  கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் கேட்கும் கட்டணத்தை  பொதுமக்கள் செலுத்தி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்க முதலமைச்சர், தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர்,  கலெக்டர் என அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளேன் என்றார்.

Tags : municipality ,Kuzhithurai ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை