×

சித்துராஜபுரம்-பூலாவூரணி சாலையை சீரமைக்கப்படுமா? கிராமமக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி, பிப். 4: சிவகாசி அருகே 3 கி.மீ தொலைவில் உள்ளது பூலாவூரணி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சித்துராஜபுரம் செல்ல 4 கி.மீ தூரம் கிராம சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் எந்த சீரமைப்பு பணியும் நடைபெறவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சித்துராஜபுரத்தில் இருந்து 2 கி.மீ தூரம் வரையுள்ள விளாம்பட்டி விலக்கு வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.ஆனால் விளாம்பட்டி விலக்கில் இருந்து பூலாவூரணி செல்லும் 2 கி.மீ தூர சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த ஆலைகளில் ஏதேனும் விபத்து நடந்தால் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து செல்ல முடியாத நிலையில் சாலை மிக மோசமாக உள்ளது. பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள கிராமச்சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகிறது.ஆனால், பூலாவூரணி சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் உள்ள பாலங்களும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலைவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. சித்துராஜபுரத்தில் இருந்து பூலாவூரணிக்கு ஏராளமான தொழிலாளர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். சாலை மோசமாக உள்ளதால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள இந்த சாலையை சீரமைத்து பழைய பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Chithurajapuram-Pulavoorani ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி