×

மத்தியில் உள்ள மோடி அரசு முதலாளிகள் வாழ வசதி ஏற்படுத்துகிறது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற முழக்கத்துடன் நடந்த பிரசார கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, மாவட்ட அவைத்தலைவர் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: அதிமுக என்றால் அண்ணா திமுக அல்ல - அடிமை திமுகவாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை வெளிகொண்டு வந்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.

அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். எடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. சசிகலாவின் காலில் விழுந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அனிதா என்ற பெயரை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. கலைஞர் ஆட்சி காலத்தில் நுழைவு தேர்வு முறையை ரத்து செய்தார். ஜெயலலிதா இருந்த போது கூட நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை.
ஆனால் தற்போது நடந்து வரும் அடிமை அதிமுக அரசு, மாநிலத்துக்கான கல்வி உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார். சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று விடுவார். மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே தான் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவுவிடம் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.400க்கு வழங்கப்பட்ட சிலிண்டர் விலை தற்போது ரூ.750 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் 2 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.40க்கு விற்ற பருப்பு ரூ.110 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று எல்ஐசி, மின்சார வாரியம், ரயில்வே துறை, வங்கி மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது விமான நிலையத்தையே அதானி குழுமத்துக்கு மோடி அரசு தாரைவார்த்து கொடுக்கிறது. மொத்தத்தில் மோடி அரசு, ஒருசில தனியார் முதலாளிகள் வாழ மட்டுமே வசதி ஏற்படுத்தி கொடுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். உத்திரமேரூரில் நேற்று மாலை உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை செய்தார். முன்னதாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள பிரசிதிப்பெற்ற ஸ்ரீவைகுண்ட வரதராஜ பொருமாள் கோயிலில் குடைஓலை முறை கல்வெட்டுகளை பார்வையிட்டு, அது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து  பஸ் நிலையத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.

Tags : government ,Modi ,employers ,speech ,Udayanidhi Stalin ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...