சென்னை: மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வரவேற்பு தெரிவித்துள்ளனர். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூ.5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 3 மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000ம் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000ஆகவும் வரவு வைக்கப்பட்டது. தேர்தலைக் காரணம் காட்டி 3 மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் இருந்து பின்வாங்க மாட்டேன். இது என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது’ முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: “தமிழ்நாட்டின் மகளிரின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல திட்டங்களை வகுத்துவரும் திராவிட மாடல் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்ற முத்தாய்ப்பான செய்தியோடு இன்றைய காலை விடிந்திருக்கிறது.
அத்துடன், அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கும் முதலமைச்சர் அண்ணன் தளபதி .மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி : முதலமைச்சரின் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூபாய் 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும்,எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.
பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும்,கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும்,நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மகளிர் உரிமைத் தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பாஜக அதிமுக கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் அண்ணன்
மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
