×

சிவகங்கை மாவட்டத்தில் கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம் நெல் விவசாயிகள் பாதிப்பு

சிவகங்கை, பிப்.4: சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 76 ஆயிரத்து 971 எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து கதிரறுப்பு தொடங்கும். ஆனால் டிசம்பர் மற்றும் இம்மாதம் முதல் இரண்டு வாரங்கள் வரை பெய்த தொடர் மழையால் விளைந்து அறுப்பிற்கு தயாராய் இருந்த பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் ஏராளமான பயிர்கள் பல நாட்கள் நீரில் மூழ்கி இருந்த நிலையில் மீண்டும் முளைக்கத் தொடங்கின. இந்நிலையில் மழை முழுமையாக நின்றதும் பல்வேறு பகுதிகளில் பயிர்களை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான தயாரிப்பு பணிகள் மட்டுமே தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பணி நடக்கவில்லை. இதனால் சின்னக்கண்ணனூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை கொண்டு வந்து பல நாட்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி வியாபாரிகள் நெல்லை மிகக்குறைந்த விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். உடனடியாக அனைத்து கொள்முதல் நிலையங்களையும் செயல்பட செய்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படுவதால் தனியார் வியாபாரிகள் கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இவ்வாறு கொடுத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். விவசாய நிலத்தில் இருந்து நெல் மூடைகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் பயண செலவு, பின்னர் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பயண செலவு, பல நாட்கள் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் செலவு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றால் வேறு வழியின்றி வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மொத்தமாக 30 இடங்களில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களையும் இதுவரை திறக்காமல் உள்ளனர். உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்க வேண்டும்.
அங்கும் வியாபாரிகளிடம் நெல்லை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளின் நெல்லை வாங்க பல நாட்கள் இழுத்தடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்ய மாட்டோம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவிட வேண்டும் என்றார்.

Tags : opening ,procurement center ,district ,paddy farmers ,Sivagangai ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...