×

ராமநாதபுரத்தில் விமானநிலையம் முதற்கட்ட பணிகளை விரைவில் துவக்க வேண்டும் மணிகண்டன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சாயல்குடி, பிப்.4: ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை முதற்கட்ட பணிகளை துவங்க வேண்டும் என, அதிமுக எம்எல்ஏ மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது திமுக எம்பி வில்சன், தமிழகத்தில் விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ‘‘தமிழகத்தில் தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்’’ என தெரிவித்தார். இதனை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடி புராதன சின்னம்,  அப்துல்கலாம் நினைவிடம் உள்ளிட்ட சுற்றுலாதளத்தை பார்வையிட வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து அதிகளவில் சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். மாவட்டத்தில் பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கு வேலை நிமிர்த்தமாக சென்று வருகின்றனர். எனவே அனைவரும் பயனடையும் வகையில் உச்சிப்புளியில் பயணிகள் விமானநிலையம் அமைக்க வேண்டும் என கடந்த 2018ல் அப்போதைய மத்திய அமைச்சர் சுரேஷ்பாபுவை சந்தித்து மனு அளித்தேன். அவர் பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  இந்நிலையில் தற்போது ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் முதற்கட்ட பணிகளை துவங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Manikandan MLA ,airport ,Ramanathapuram ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்