×

சாயல்குடியில் தரமற்ற இலவச சைக்கிள் வழங்கல் உருட்டிச் சென்ற மாணவர்கள்

சாயல்குடி, பிப்.4: சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள் ஓட்டிச்செல்வதற்கு லாயகற்றதாக இருந்ததால் மாணவர்கள் தள்ளிக்கொண்டே சென்றனர்.  சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. கடலாடி, சாயல்குடி, கன்னிராஜபுரம், மேலக்கிடாரம் உள்ளிட்ட 11 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1,318 மாணவர், மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த சைக்கிளின் டயர்களில் காற்று இல்லாமல், ரிம்மிள் உள்ள போக்ஸ் கம்பிகள், பெடல், பிரேக், ஹேண்ட்பார் உள்ளிட்டவற்றை முறையாக பொருத்தாமல் பெயரளவில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சைக்கிள்களை மாணவர்கள் ஓட்டி செல்லமுடியாமல் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வீடுகளுக்கு தள்ளியே சென்றனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகிலுள்ள கீரந்தை, எம்.கரிசல்குளம், ஒச்சதேவன் கோட்டை, கூரான்கோட்டை, காணீக்கூர், புல்லந்தை, வி.வி.ஆர் நகர், பூப்பாண்டியபுரம், குதிரைமொழி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து படித்து வருகிறோம். பல கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடையாது. இந்நிலையில் அரசு வழங்கிய அனைத்து சைக்கிள்களிலும் முக்கிய இடங்களில் இருக்ககூடிய பால்ராஸ் குண்டுகள் இல்லை, செயின் அறுந்து கிடக்கிறது, காற்று இல்லாத டயர்கள், கழண்டு விழும் உதிரிபாகங்களால் சைக்கிளை பயன்படுத்த முடியவில்லை, இதனால் ரூ.400 முதல் 600 வரை கூடுதல் செலவு செய்து சைக்கிள்களை சீரமைத்து வருகிறோம். மேலும் சைக்கிள்களில் செல்லும்போது உதிரிபாகம் கழண்டு விடுவதால் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் அவலம் உள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்களை பள்ளியில் முறையாக சீரமைத்து ஓட்டிச் செல்லும் நிலையில் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sayalgudi ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்