ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழையால் அழுகிய மிளகாய் செடிகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.4: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகமான மிளகாய் சாகுபடி செய்யும் மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் மிளகாய்   சாகுபடி செய்யும் பகுதி ஆர்.எஸ்.மங்கலம். இங்கு விளையக்கூடிய மிளகாய் வத்தல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றது. இங்கு விளையும் மிளகாய் மிகவும் தரமாக இருக்கும் என்பதால் மதுரை, விருதுநகர், சாத்தூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. இதற்காக வாரம் ஒருமுறை சனிக்கிழமைதோறும் சந்தை நடைபெறும்.

இந்நிலையில் தொடர் மழையால் இங்கு பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன. பெரும்பாலான விளை நிலங்களில் செடிகளில் உள்ள இலை தழைகள் உதிர்ந்து மகசூல் பாதித்துள்ளது. விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக கூடுதலாக விவசாயிகள் மிளகாயை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இரட்டையூரணி, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார்பட்டினம், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, சீனாங்குடி, வண்டல், வரவணி, சேத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டன. மிளகாய் செடிகள் நன்றாக குத்து செடிகளாக வளர்ச்சியடைந்த நிலையில் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி மிளகாய் செடிகள் மூழ்கி அழுகின. இதனால் பல ஆயிரங்களை கடன் வாங்கி செலவு செய்த  விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு  மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: