×

புழலில் ரூ.14 கோடியில் மாநகராட்சி பள்ளி; 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில் உள்ள புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள பழைய மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை முற்றிலும் இடித்துவிட்டு, அங்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் ரூ.14 கோடி மதிப்பில் புதிதாக தரைதளத்துடன் 3 மாடிகளைக் கொண்ட பள்ளி மற்றும் சத்துணவுக்கூட கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இப்பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சிஎம்டிஏ உறுப்பினர், செயலர் பிரகாஷ் உள்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கட்டுமானப் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேட்டறிந்தார். பின்னர் அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அப்பள்ளிக்கு அருகில் உள்ள மின்மாற்றி மற்றும் நுழைவு வாயிலில் உள்ள மின்கம்பத்தை மாற்றிடத்துக்கு அகற்ற வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் அப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சிவகுமார் மனு வழங்கி வலியுறுத்தினார். இப்பிரச்னை குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், கடந்த 1967ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளி, தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடத்தில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று, இப்பள்ளி வரும் 25ம் தேதிக்குள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
இந்த ஆய்வில் மாதவரம் மண்டல குழுத்தலைவர் நந்தகோபால், வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, வார்டு திமுக செயலாளர்கள் குப்பன், சந்துரு, சுந்தரேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஜெ.ரவி, முன்னாள் கவுன்சிலர் அகிலா அந்தோணி, முன்னாள் வட்ட செயலாளர் சரவணன் உள்பட மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Sekharbhabu ,Maghal ,Secondary School ,Mahal, Gandhi Main Road ,Madhavaram Zone ,Chennai Municipality ,
× RELATED உலகில் 9 கோள்கள் இருந்தாலும்...