×

காளைகள் முட்டி 33 பேர் படுகாயம் கே.வி.குப்பம், அணைக்கட்டு அருகே மாடு விடும் விழா

கே.வி.குப்பம், பிப்.4: கே.வி.குப்பம், அணைக்கட்டு அருகே நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 33 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி கிராமத்தில் நேற்று 52ம் ஆண்டு மாடுவிடும் திருவிழா நடந்தது. இதையொட்டி, குடியாத்தம், பரதராமி, காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, சித்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.விழாவை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு திரண்டனர். கால்நடை மருத்துவர்களின் முறையான பரிசோதனைக்கு பிறகு காலை 8.30 மணியளவிலேயே காளை விடும் விழா தொடங்கியது. இதில் குறிப்பிட்ட தூரத்தை அதிவேகமாக அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ₹1 லட்சத்து ஆயிரத்து ஒன்று, இரண்டாம் பரிசு ₹77,777, மூன்றாம் பரிசு ₹66,666 உட்பட 65 பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆர்டிஓ சேக் மன்சூர் தலைமையில் தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி தரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, வாடிவாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்த காளைகள் முண்டியடித்ததில் 5 காளைகள் நிலை தடுமாறி கீழே விழுந்தன. ஆனால் காயம் எதுவும் ஏற்படவில்லை. அப்போது, காளைகளின் உரிமையாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். மேலும், விழாவில் பங்கேற்ற இளைஞர்கள் 15 பேருக்கு மாடு முட்டி லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் உரிய சிகிச்சை அளித்தனர். மதியம் 2 மணியளவில் காளை விடும் விழா முடிவுற்றது.
ஒடுகத்தூர்:

அணைக்கட்டு அடுத்த பொய்கை மோட்டூரில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. வேலூர் உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி தலைமையில், அணைக்கட்டு தாசில்தார் பழனி மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில், உறுதிமொழி ஏற்றதும் விழா துவங்கியது. விழாவில் 1,890 காளைகள் பங்கேற்றன. குறிப்பிட்ட தூரத்தை அதிவேமாக கடந்த காளையின் உரிமையாளருக்க முதல் பரிசாக ₹55 ஆயிரம் வழங்கினர். அதேபோல், மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் காளைகள் முட்டியதில் 18 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. முன்னதாக, பொய்கை கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிச்செல்வன், வினோத் ஆகியோர் காளைகளை பரிசோதனை செய்தனர்.

Tags : KV Kuppam ,dam ,
× RELATED ரம்ஜான் நெருங்கும் நிலையில்...