×

கலப்பட மருத்துவமுறையை திரும்ப பெறக்கோரி அரசு டாக்டர்கள் டூவீலர் பேரணி

தர்மபுரி, பிப்.4: கலப்பட மருத்துவமுறையை திரும்ப பெறக்கோரி அரசு டாக்டர்கள், டூவீலர்களில் பேரணியாக சென்றனர். தர்மபுரி மாவட்ட அரசு டாக்டர்கள், கலப்பட மருத்துவ முறையை கைவிடக்கோரி, நேற்று தர்மபுரி மாவட்ட இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் இருந்து, சேலம் வரை டூவீலர்களில் பேரணியாக சென்றனர். பேரணிக்கு இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் முருகன் தலைமை வகித்தார். பேரணியை முன்னாள் எம்பியும், டாக்டருமான செந்தில் துவக்கி வைத்து கூறியதாவது:  மத்திய அரசு கலப்பட மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆபத்தான அறிவிப்பாகும்.  நவீன மருத்துவத்தில் அறுவை சிகிச்சை என்பது உடற்கூறு, மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை படித்தும், அறுவை சிகிச்சைக்காக 3 ஆண்டுகள் என 8 ஆண்டுகள் மருத்துவம் படிக்க வேண்டும்.

ஆனால், ஆயுர் வேத மருத்துவத்தில் இவை கற்பிக்கப்படுவதில்லை. எனவே, ஆயுர்வேதம் படித்தவர் அறுவை சிகிச்சை செய்வது, மனித உயிர்களுக்கு பெரிய ஆபத்தை தரும். இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், தமிழகத்தின் வட எல்லையான ஓசூர் முதல் தென் தமிழகத்தின் எல்லை வரை அனைத்து மாவட்டங்கள் வழியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டூவீலர் பேரணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேரணியில் செயலாளர் கோகுல், பொருளாளர் சிவகுமார், அரசு டாக்டர்கள் மாநில செயலாளர் சந்திரசேகரன் மற்றும் டாக்டர்கள் சிவசுப்ரமணியன், வெங்கடேசன், சுரபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : rally ,government doctors ,withdrawal ,
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி