×

கோயில் நாட்டாமை கொலை: என்எல்சி ஒப்பந்த தொழிலாளி கைது

பண்ருட்டி, பிப்.4: பண்ருட்டி அருகே சொரத்தூர் கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் கிடா வெட்டி திருவிழா நடத்துவது வழக்கம். இந்த வருடமும் நேற்று முன்தினம் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் திருவிழாவிற்காக வந்திருந்தனர். கோயிலில் அதே ஊரை சேர்ந்த சிவகங்கை(75) என்பவர் கிடா வெட்டும் வேலையை செய்து வந்தார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகவேல் வகையறாவிற்கும் கோயிலில் நாட்டாமையாக இருப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த கோயிலில் நாட்டாமையாக இருந்து வந்த சிவகங்கை கிடா வெட்டும் வேலையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமி வீதி உலா சென்றது. கோயில் அருகே நின்றுகொண்டிருந்த சிவகங்கையை அதே ஊரை சேர்ந்த முருகவேல்(40) என்பவர் குடிபோதையில் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றார். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்து சிவகங்கை மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் பொறுப்பு சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சிவகங்கை இறந்த நிலையில் கிடந்தார். இதனையடுத்து உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக சிவகங்கையின் மகன் தனஞ்செழியன் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து முருகவேலை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஒரு முந்திரி தோப்பில் மறைந்திருந்த முருகவேலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளி வாக்குமூலம்: போலீசாரிடம் முருகவேல் கொடுத்த வாக்குமூலத்தில், நான் என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளேன். எனது தந்தை இந்த கோயிலில் பல ஆண்டுகளாக நாட்டாமையாக இருந்து வந்தார். அதன் பிறகு சிவகங்கை நாட்டாமையாக நியமனம் செய்யப்பட்டார். சிவகங்கை நாட்டாமையாக இருந்தது எனக்கு பிடிக்கவில்லை. நேற்று முன்தினம் கிடா வெட்டி பூஜை செய்தபின் வெளியே வந்த சிவகங்கையை பார்த்து எங்கள் குடும்பம்தான் நாட்டாமையாக வேண்டும், நாங்கள்தான் கிடா வெட்டுவோம், நீ எப்படி கிடா வெட்டலாம் என ஆவேசமாக பேசி தகராறு செய்தேன். உன்னால் முடிந்ததை பார் என கூறியதால் கடும் கோபமடைந்து ஓங்கி அறைந்தேன். இதில் தடுமாறி கீழே விழுந்தபோது காலால் சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டேன். வெளியூர் செல்ல முந்திரிதோப்பில் பதுங்கியிருந்தபோது போலீசார் என்னை கைது செய்தனர் என கூறினார்.

Tags : Temple ,NLC ,contract worker ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு