×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 9 நாள் தர்ணா போராட்டம்

திருப்பூர், பிப். 4:   திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் 9 நாட்கள் தொடர் முழக்க தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் முஹம்மது யாசர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது.

இந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். திருப்பூரில் 9 கட்டமாக தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் படி 5ம் தேதி சி.டி.சி கார்னர், 6ம் தேதி புதூர் பிரிவு, 10ம் தேதி ஹவுசிங் யூனிட், 11ம் தேதி பாண்டியன் நகர், 12ம் தேதி புதிய பஸ் நிலையம், 13ம் தேதி ரயில் நிலையம், 18ம் தேதி பல்லடம் பஸ் நிலையம், 19ம் தேதி மங்கலம் நால்ரோடு, 20ம் தேதி காங்கயம் பஸ் நிலையம், 23ம் தேதி அவிநாசி பஸ் நிலையம் ஆகிய 9 இடங்களில் போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மத உணர்வுகளை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக அரசு ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என மனு அளித்தோம். அந்த மனுவை பெற்ற முதலமைச்சர் குடியுரிமை திருத்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என கூறினார். இதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முஹம்மது யாசர் கூறினார்.

இதில் த.மு.மு.க மாவட்ட செயலாளர் அபுசாலிஹ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நஸ்ருதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, எஸ்.டி.பி.ஐ பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு, குர்பானி அறக்கட்டளை தலைவர் பைஷல் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : protest ,Tarna ,
× RELATED அர்ஜெண்டினாவில்...