×

மருதமலை சாலையில் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொண்டாமுத்தூர்,பிப்.4:கோவை பாரதியார் பல்கலை கழகம் முதல் மருதமலை அடிவாரம் வரை சாலையோரம் அடர்த்தியாக வளர்ந்துள்ள புதர்களில் காட்டுப்பன்றிகள் பதுங்கியிருப்பதால் அசம்பாவிதம் நேரும் முன்பாக புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்றுமுன்தினம் தைபூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. ஆண்டுதோறும் தைபூசத்திருவிழாவையொட்டி கோவைநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக மருதமலை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரும் 8ம் தேதி தைப்பூசம் வரஇருப்பதால் பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே காப்பு கட்டி விரதம்மேற்கொண்டு வருகின்றனர்.கோவை புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர், தேவராயபுரம், நரசிபுரம், ஆலாந்துறை, மத்வராயபுரம் கோவை புறநகர் தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மருதமலை பாதயாத்திரைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பகல் பொழுதை விட இரவிலேயே நடைபயணம் மேற்கொள்வர்.

மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலை கழகம் முதல் மலையடிவாரம் இரு புறமும் புதர்கள் அடர்த்தியாக உள்ளது. இவற்றில் காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் தங்கியிருக்கிறது. இரவு நேரத்தில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை இவை தாக்க கூடும் அபாய நிலை நீடிக்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் கூடுதல் தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவிர தைபூசத்திருவிழா முடியும் வரை வனத்துறையினர் கல்வீரம்பாளையம் முதல் மருதமலை வரை ரோந்து பணி மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி