×

அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கோவை, பிப். 4:  கோவை அரசு மருத்துவமனையின் லக்சயா திட்டம் தொடர்பாக தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு (சீமாங்), மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார மகப்பேறு மருத்துவமனைகளுக்கு பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளை மரியாதையுடன் நடத்துவது, பராமரிப்பது, படுக்கை வசதி, அறுவைசிகிச்சை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என கண்காணிக்க லக்சயா தரச்சான்று குழு ஏற்படுத்தப்பட்டது.
 
இந்த குழுவினர் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு நடத்தி, சிறந்த மகப்பேறு மையத்திற்கு தரச்சான்று, பரிசுதொகை வழங்குவார்கள். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் லக்சயா திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், ‘‘கோவை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் லக்சயா திட்டம் குறித்து இரண்டு பேர் அடங்கிய சிறப்பு குழு ஆய்வு நடத்தியது. இதில், உள்கட்டமைப்பு வசதி, வார்டு, கழிப்பறை வசதி, அறுவைசிகிச்சை வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.  

இதனை தொடர்ந்து தொழில்நுட்ப பிரிவுக்கான சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இதற்கு மதிப்பெண் அளிக்கப்படும். இதன் அடிப்படையில் மகப்பேறு துறைக்கு ஊக்க தொகை வழங்கப்படும். பிளாட்டினம், தங்கம், வெள்ளி பதக்கம் அளிக்கப்படும். மேலும், ஆண்டுக்கு தலா ரூ.6 லட்சம் வரை மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கும்,’’ என்றார்.

Tags : Inspection ,National Health Officers ,Government Hospital ,
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு