×

பட்டசித்ரா ஓவியக் கலை, கோட்டிபுவா நடனத்தின் பிறப்பிடம் வாழும் கலாச்சார சின்னமாக ஒடிசா கிராமம்: கிருஷ்ண லீலை,ஜெகந்நாதர் கதைகளை உயிர்ப்பிக்கும் ஓவியங்கள்

 

சென்னை: பட்டசித்ரா ஓவியக் கலை, கோட்டிபுவா நடனத்தின் பிறப்பிடம் என வாழும் கலாச்சார சின்னமாக ஒடிசாவின் ரகுராஜ்பூர் கிராமம் உள்ளது. ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள ரகுராஜ்பூர் கிராமம், இன்று இந்தியாவின் மிக முக்கியமான பாரம்பரிய கைவினை மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. பூரி நகரிலிருந்து வெறும் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிறிய கிராமம், பட்டசித்ரா ஓவியக் கலை மற்றும் கோட்டிபுவா நடனத்தின் பிறப்பிடமாகவும், ஒரு திறந்தவெளி கலை அருங்காட்சியகமாகவும் புகழ்பெற்றுள்ளது.

ரகுராஜ்பூரில் உள்ள ஒவ்வொரு வீடும் ஒரு கலைஞனின் பணியிடமாகவே விளங்குகிறது. கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கலைஞர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தலைமுறை தலைமுறையாக பட்டசித்ரா ஓவியங்களை உருவாக்கி வருகின்றனர்.
பட்டசித்ரா ஓவியங்கள், குறிப்பாக ஒடிசாவின் பூரிஜெகந்நாதர் கோயில் சடங்குகளுடன் தொடர்புடையவை, கி.பி. 12ம் நூற்றாண்டிலேயே தோன்றியதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சில ஆய்வுகள் இந்த பழங்காலக் கலை வடிவம் கி.மு. 5ம் நூற்றாண்டிற்கு முந்தையது என்றும் குறிப்பிடுகின்றன.

இயற்கை வண்ணங்கள், மெல்லிய தூரிகைகள் மற்றும் நுட்பமான வரைவியல் மூலம் ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண லீலைகள்,ஜெகந்நாதர் கதைகள் போன்றவை துணி, பனை ஓலை, காகிதம் ஆகியவற்றில் உயிர்ப்புடன் ஓவியமாக வரைந்து வருகின்றனர். இதுதவிர, தாலபட்ட சித்ரா (பனை ஓலை செதுக்கல்), மரப் பொம்மைகள், கல் சிற்பங்கள், காகித மச்சே (papier-mâché) சிற்பங்கள், பாரம்பரிய முகமூடிகள் ஆகியவையும் இக்கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.

மேலும் ரகுராஜ்பூர் கோட்டிபுவா நடனக் குழுக்களுக்கு பெயர் பெற்ற ஒரு வரலாற்று கிராமம். ஆண் குழந்தைகள் பெண் உடையில் ஆடும் இந்த நடன வடிவம், ஒடிசி நடனத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. இளம் கலைஞர்கள் அக்ரோபாடிக் நிலைகள், பாடல், இசைக்கருவி வாசிப்புடன் இதை தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றனர். பத்ம விபூஷன் குரு கேளுசரண் மொஹபாத்ரா, பத்மஸ்ரீ குரு மகுனி சரண் தாஸ் போன்ற ஒடிசி நடனத்தின் பெரும்கலைஞர்களின் பிறப்பிடமும் இதுவாக இருந்துள்ளது.

இத்தனை சிறப்பு உடைய இந்த இடத்திற்கு 2000ம் ஆண்டு INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) அமைப்பால் ஒடிசாவின் முதல் ஹெரிடேஜ் கிராஃப்ட்ஸ் வில்லேஜ் ஆக அறிவிக்கப்பட்டது. 2023ல் இந்திய சுற்றுலாத்துறையால் ‘Best Tourism Village of India’ (வெள்ளி பிரிவு) விருதைப் பெற்றது.

ஆண்டுதோறும் பட்டசித்ரா மேளா மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அப்போது சுற்றுலாப் பயணிகள் கலைஞர்களிடம் நேரடியாக ஓவியங்கள் வாங்கலாம், பட்டசித்ரா பயிற்சி பெறலாம், கோட்டிபுவா நிகழ்ச்சிகளைக் காணலாம். ஆனால், நடுத்தர வியாபாரிகளால் சுரண்டல், இளம் தலைமுறையினரின் ஆர்வக் குறைவு போன்ற சவால்களும் உள்ளன. இருப்பினும், அரசு மற்றும் சுற்றுலா முயற்சிகள் மூலம் இந்த பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது.

ரகுராஜ்பூர் இன்று வெறும் ஒரு கிராமம் அல்ல; இது ஒரு வாழும் கலாச்சார சின்னமாக உள்ளது. கலை, நடனம், பாரம்பரியம் ஆகியவை இங்கு ஒருங்கிணைந்து உயிர்ப்புடன் திகழ்கின்றன. ஒடிசாவின் கலை மரபை நேரடியாக உணர விரும்புவோருக்கு இது ஒரு தவிர்க்க முடியாத இடமாக உள்ளது.

இது தொடர்பாக அக்கிராமத்தை சேர்ந்த களு சரண் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக பட்டசித்ரா ஓவியம் உருவாக்கி வருகிறேன். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்திற்கு ஓவியத்தை விற்பனைக்காக எடுத்து செல்கிறேன், குறிப்பாக சென்னையில் கூட டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் பட்டசித்ரா ஓவியம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை ஓவியத்தை சென்னைக்கு எடுத்து வருவேன். போதிய வருமானம் இந்த ஓவிய விற்பனை மூலம் பெறுவதால் வேறு பணிகளுக்கு செல்லாமல் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பட்டசித்ரா ஓவியம் என்றால் என்ன?

இந்த பட்டசித்ரா ஓவியம் பழமையான கலை. ‘பட்ட’ (துணி) + ‘சித்ரா’ (ஓவியம்) என்று பொருள். இயற்கை வண்ணங்கள் (கனிமங்கள், தாவரங்கள், மண்) கொண்டு துணி, பனை ஓலை, காகிதம் ஆகியவற்றில் வரையப்படுவதால் இது பட்டசித்ரா ஓவியம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

Tags : Odisha Village ,Patachitra ,Kottibua ,Krishna Leela ,Jagannath ,Chennai ,Raghurajpur ,Odisha ,Kottibuwa ,Puri district ,Raghurajpur village ,India ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை...