×

மருத்துவ பொருட்கள் பட்டியலில் செங்காந்தள் மலர், விதைகள் சேர்ப்பு

ஈரோடு, பிப்.4:மத்திய மருத்துவ பொருட்கள் பட்டியலில் செங்காந்தள் மலர், விதைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஈரோடு எம்பி. கணேசமூர்த்தி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கண்வலி கிழங்கு என்ற செங்காந்தள் மலர் பயிரிட்டு வருகின்றனர். இதன் விதைகள் மருத்துவ குணம் கொண்டது. ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இந்த விதைக்கு பெரிய வரவேற்பும், நல்ல சந்தை மதிப்பும் உள்ளது. இந்த மலரில் கிடைக்கும் விதைகள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பொருட்கள் பட்டியலிலும், வேளாண் விதை பொருட்கள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. இதன் சாகுபடியில் 10 ஆயிரம் சிறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கவும், இதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றிடவும், மருத்துவ பொருட்கள் பட்டியலில் பதிவு பெறவும், அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், குளிர்கால கூட்ட தொடரில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த மத்திய அரசு, கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.

தற்போது ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம் ஹோமியோபதி துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) ஸ்ரீபத்நாயக் எனக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய ஆயுஷ்மிங்ன் என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் செங்காந்தள் மலர் விதைகள் மருத்துவ பொருட்கள் பட்டியல் சேர்க்கப்படும் என்றும், உற்பத்தி செலவில் பாதி மானியமாகவும், அதற்கு ஒரு ஹெக்டேருக்கு 2 லட்சத்து 40 ஆயிரத்து 667 ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவார்கள். இவ்வாறு ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கூறி உள்ளார்.

Tags :
× RELATED கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை...