×

வாய்க்காலில் வாகனங்கள் கழுவுவதை தடுக்க இரும்பு சங்கிலி

ஈரோடு, பிப்.4:ஈரோடு அருகே கருங்கல்பாளையம் காவிரிரோடு பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வாகனங்களை நிறுத்தி கழுவுவதை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் இரும்பு சங்கிலி அமைத்துள்ளனர். இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுநீர் காலிங்கராயன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் தேக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் கொடுமுடி ஆவுடையார்பாறை வரை பாசனத்திற்காக தண்ணீர் சென்று வருகிறது.

வாய்க்கால் கரையோரத்தில் வாகனங்களை நிறுத்தி கழுவுவதால் வாய்க்கால் கரை சேதமடைந்து வருகிறது. இதுதவிர, வாய்க்கால் கரை பகுதிகளில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், வாய்க்காலுக்கு குளிக்க வருபவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதைத்தடுக்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோடு வழியாக செல்லும் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மேற்கு பகுதியில் அதிகளவில் வாகனங்களை நிறுத்தி கழுவி வந்தனர்.

இதனால், இங்கு கரை பகுதி வழியாக வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு சங்கிலியை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர். இதனால், வாய்க்காலில் கழுவ வரும் வாகனங்கள் மட்டுமின்றி விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். வாய்க்காலில் வாகனங்களை கழுவ வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒட்டுமொத்தமாக வாய்க்கால் கரையில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு சங்கிலி போட்டுள்ளதால் நெல், உரம் போன்றவற்றை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நெல் அறுவடைக்கான இயந்திரங்களும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மாட்டுச்சந்தைக்கு வரும் வாகனங்களை இங்கு கொண்டு வந்து கழுவுவதால் வாய்க்கால் சேதமடைந்து வருகிறது. இதைத்தடுக்க இரும்பு சங்கிலி போட்டு தடுப்பு அமைத்துள்ளார்கள். ஆனால், இந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்காக வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் வாய்க்கால் கரைகளில் எச்சரிக்கை பலகை வைத்து கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை