விழுப்புரம், பிப். 11: விழுப்புரம் அருகே நள்ளிரவு பிரபல ரவுடி தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். விழுப்புரம் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மெண்டல் கதிர் (எ) கதிரவன் (40). பிரபல ரவுடியாவார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மேல்தெரு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விராட்டிகுப்பம்பாதையை சேர்ந்த மேகநாதன் (44), அன்பு (40) ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கதிர், அன்புவிடம் பிரச்னை செய்துள்ளார். அருகில் இருந்த மேகநாதன் அன்புவிடம் ஏன் பிரச்னை செய்கிறாய் என்று கதிரிடம் கேட்கும்போது அவர்களுக்குள் பிரச்னை அதிகரித்துள்ளது.
இதில் மேகநாதன், கதிரை கீழே தள்ளிவிட்ட நிலையில் இருவரும் அங்கிருந்த டீ குடிக்கும் கண்ணாடி கிளாசால் மாறி மாறி தலையில் தாக்கி குத்திக் கொண்டனர். இதில் கதிர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மேகநாதன் அருகில் இருந்த கிரைண்டர் குழவி கல்லை எடுத்து அவர் தலையில் போட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிந்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
