×

இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதி: கர்நாடகா, கேரள அரசுகள் புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை

சென்னை: கர்நாடகா,  கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், இரு மொழி கொள்கையில் தமிழகம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று நோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசு இயந்திரங்களையும் திறம்பட ஒருங்கிணைத்த பெருமையும், புகழும் முதல்வர் எடப்பாடியை சாரும்.

நாட்டிலேயே பிரத்தியேகமாக ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை முறையைக் கையாண்ட ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடாகும்.
* கோவிட்-19 மீட்டெடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இதுவரை 13208 கோடி தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு செலவிட்டுள்ளது. கடன்களை பெற்றதன் மூலம், கோவிட்-19 தொற்று கடுமையான தாக்கத்தில் இருந்து தமிழக மக்களை பாதுகாத்துள்ளது.
*  சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக 13,300 கோடியை  அரசு பெற்றுள்ளது. இழப்பீட்டுக்கு பதிலாக 4890 கோடி கடனும் அடங்கும். 2017-18ம் நிதியாண்டில் வரி ஒதுக்கீடு தொடர்பான பிழையை சரி செய்து இறுதியாக 4321 கோடி இந்தாண்டு தமிழ் அரசு பெற்றுள்ளது.
*  முதலமைச்சரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும்.
* நிவர் மற்றும் புரெவி புயல்களால் 3750 கோடி மற்றும் 1514 கோடி மதிப்பில் ஏற்பட்ட சேதங்களை விரிவாக விளக்ககூடிய இரண்டு கோரிக்கை மனுக்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்துள்ளது.
* கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்மென்று மத்திய அரசை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
* பெரியாறு ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்டுவதற்கு, கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்க கூடாது.
* காவிரி ஆற்றின் குறுக்கே 406 கோடியில் நஞ்சை-புகலூர் தடுப்பணை திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் பாசன திட்டத்திற்கு 1652 கோடியை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இதே போன்று மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்காக சரபங்கா நீரேற்று பாசன திட்டப்பணிகள் 565 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும்.
*அழகன் குப்பம், ஆலம்பறை குப்பம் மற்றும் ஆற்காட்டுத்துறையில் ₹385 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகங்களை கட்டுவதற்காக நிதியுதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* வளர்ந்து வரும் துறைகளை ஊக்குவிப்பதற்காக மின்சார வாகன கொள்கை மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்தி கொள்கையை அரசு அறிவித்துள்ளது.  
* தமிழகத்தில் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை இறுதி செய்யப்பட்டு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.
* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுகிற வகையில் தமிழக அரசு இக்கழத்தில் 1000 கோடியை 3 வருடங்களில் முதலீடு செய்யும்.
* 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள், எஞ்சிய கிராமங்களில் 2021 நவம்பர் 30ம் தேதிக்குள் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.
*பெருங்குடி ஏரியையும் போரூர் ஏரியையும் மீள்நிரப்புவதற்காக, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில், 10 எம்.எல்.டி. திறனுடைய இரண்டு மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-Iன் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் பிரதமர் மோடியால் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு 50:50 பகிர்வு அடிப்படையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
*  இரு மொழி கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
* அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது. முதல்வர் எடப்பாடியின் தன்னிகரற்ற தலைமையின் கீழ், சிறப்பாகச் செயல்படும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* நாம் தமிழ்நாட்டின் 15வது சட்டமன்றத்தின் நிறைவு கூட்டத் தொடரில் கூடியுள்ளோம். அரசின் சார்பாக, பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் நான் எடுத்துரைத்துள்ளேன். இந்த அரசு, பெருமைப்படும் விதமாக பல சாதனைகளைப் புரிந்துள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Government ,Tamil Nadu ,Governments ,Banwar ,speech ,Kerala ,Karnataka ,Purohit ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...