×

கம்மவான்பேட்டை கிராமத்தில் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்த ராணுவ பயிற்சி பெண்கள் பொதுமக்கள் பாராட்டு

கண்ணமங்கலம், பிப்.3: கம்மவான்பேட்டை கிராமத்தில் பயணிகள் நிழற்கூடத்தை சொந்த செலவில் சீரமைத்த ராணுவ பயிற்சி பெறும் இளம்பெண்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் ராணுவ வீரர்கள் அதிகம் பணியாற்றும் கிராமமாக வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராணுவவீரர்கள் இல்லாத வீடே இல்லை. தாத்தா, பிள்ளை, பேரன் என மூன்று தலைமுறைகளாக ராணுவவீரர்கள் வீடுதோறும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்நிலையில், கம்மவான்பேட்டை கிராமத்தில் கடந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ பயிற்சி மைதானத்தை, அப்போதைய வேலூர் கலெக்டர் ராமன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர் எல்.ஏழுமலை தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் ராணுவம் மற்றும் போலீசில் சேர்வதற்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், கிருஷ்ணகிரி, ஆம்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளம்பெண்கள் இந்த கிராமத்திலேயே தங்கி பயிற்சி செய்கின்றனர்.

இந்நிலையில், ராணுவத்தில் சேர்வதற்கு பயிற்சி பெறும் இளம்பெண்கள் ஒன்று சேர்ந்து, கம்மன்வான்பேட்டை கிராமத்தின் நுழைவு வாயிலில் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள பயணிகள் நிழற்கூடத்தை தங்களது சொந்த செலவில் சீரமைத்துள்ளனர். நிழற்கூடத்திற்கு புதிதாக வர்ணம் அடித்து அழகுப்படுத்தி உள்ளனர்.

ராணுவப்பேட்டை என்று அழைக்கப்படும் இந்த கிராமத்தில் நுழையும்போதே ராணுவ முகாம் போல் பெயின்ட் செய்திருப்பது அழகையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ராணுவத்தில் சேர்ந்து சாதிக்க துடிக்கும் இந்த இளம்பெண்களின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்து இளைஞர்களும் இதுபோல் தங்கள் கிராமத்தை அழகுப்படுத்த முன்வர வேண்டும். அதற்கு இந்த இளம்பெண்களின் முயற்சி முன் மாதிரியாக விளங்குகிறது என தெரிவித்துள்ளனர்.

Tags : trainee women ,passenger pavilion ,village ,public ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...