×

தாமிரபரணி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா? திதி மண்டபத்திற்கு செல்ல வழியில்லை

நெல்லை, பிப். 3: மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு, புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. வழிநெடுக கல் மண்டபங்கள், சிறிய கல் பாலங்கள், கல் படித்துறைகள் அமைந்துள்ளன. முன்னோருக்கு திதி கொடுப்பது, இளைப்பாறுதல் என பல பணிகளும் இந்த மண்டபங்களும், பாலங்களும் பயன்படுகின்றன. இதேபோல் நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பின்புறம் உள்ள தொடர் கல் மண்டபங்களில் கடைசி கல் மண்டபம் திதி கொடுப்பதற்கும், இறந்த நபரின் 10ம் நாள் சடங்கு நிகழ்ச்சிகளுக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மண்டபத்துக்கு ஆற்றின் நடுவே உள்ள சிறிய கல்பாலத்தை கடந்து செல்வார்கள். பழமை வாய்ந்த இந்த கல் பாலம், கடந்த 1992ம் ஆண்டு ெபருவெள்ளத்தையும் தாங்கி நின்றது.

இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தில் கல் பாலத்தின் பாதி பகுதி உடைந்து விழுந்துள்ளது. இதனால் தற்போது இப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படித்துறையையும், கல் மண்டபத்தையும் பயன்படுத்த முடியவில்லை. கல் பாலம் உடைந்து விழுந்த பகுதியில் பாம்புகள் தொல்லை அதிகம் உள்ளன. இதை மீறி சிலர் துணிச்சலாக உடைந்த பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீரில் இறங்கி மறுபகுதியை கடக்கின்றனர். இவ்வாறு செல்லும்போது தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வரும் 11ம் தேதி தை அமாவாசைக்கு முன்பாக குறுக்குத்துறை ஆற்றிலுள்ள கல் பாலத்தை பழமைமாறாமல் சீரமைத்து கொடுக்க வேண்டுமென நெல்லை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

‘‘மின்கம்பத்தையும்
மாற்ற வேண்டும்’’
தாமிரபரணியில் கரைபுரண்ட வெள்ளத்தின்போது குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து உற்சவர் சிலை, மேலக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் கோயில் அருகிலுள்ள மின்கம்பங்களும் சேதமடைந்தன. தற்போது ஆற்றில் வெள்ளம் வடிந்து சகஜநிலை திரும்பியுள்ள நிலையில், கோயிலில் தேங்கிய சேறுகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. மேலக்கோயிலில் இருந்து சுப்பிரமணியர் உற்சவர் சிலையை கோயிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் திறந்து பூஜைகள் நடத்தும் வகையில், பழுதான மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : floods ,Tamiraparani ,Didi Hall ,
× RELATED மீன் இனங்கள் குறித்த ஆய்வை...