×

தாலுகா அலுவலகத்தை முற்றுகை

மேட்டூர்,  பிப்.3: சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ளது  பெரியசோரகை பூமிரெட்டிப்பட்டி காலனி. இங்கு 200க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசிக்கின்றனர். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்கள்,  தங்களுக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா  கேட்டு, முதல்வர் முதல் மேட்டூர் தாசில்தார் வரையிலும், 13 முறை மனு  அளித்துள்ளனர். ஆனால் தாசில்தார் அலட்சியம் காரணமாக, முதல்வர் குறிப்பிட்டு  கொடுத்த தேதியில், மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த பூமிரெட்டிப்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று காலை  மேட்டூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, வீட்டுமனை பட்டா வழங்கும் வரை,  காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டவர்கள், இலவச வீட்டுமனை பட்டா  வழங்காவிடில், தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை  ஆகியவற்றை ஒப்படைப்போம் என கோஷமிட்டனர்.

இதையடுத்து முற்றுகையில்  ஈடுபட்ட பொதுமக்களுடன், தாசில்தார் சுமதி சமாதான பேச்சுவார்த்தை  நடத்தினார். வீட்டுமனை பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்  உறுதியளித்தார். ஆனாலும்  மக்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.  இதனால் தாசில்தார் சுமதி வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டார். இதைடுத்து போலீசாரை வரவழைத்து பொதுமக்களை விரட்ட முயற்சித்தனர். ஆனால்  பொதுமக்கள் செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்னைக்கு  விரைவில் தீர்வு காண்பதாக, தாசில்தார் சுமதி மற்றும் போலீசார்  உறுதியளித்தனர். இதையடுத்து சமாதானமடைந்த பொதுமக்கள், முற்றுகையை கைவிட்டு,  அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மேட்டூர் தாலுகா அலுவலகத்தில்  சுமார் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,taluka office ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...