சேலம் அருகே நாய் குரைத்த தகராறில் தொழிலாளி அடித்து கொலை

சேலம், பிப்.3: சேலம் அருகே நாய் குரைத்த தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த தந்தை, 2 மகன்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே சித்தூர் மேல்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(50).  தறி தொழிலாளியான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது உறவினர் சேட்டு(55).  இவருக்கு ரவி(29) மற்றும் லட்சுமணன்(25) என்ற மகன்கள் உள்ளனர். பெரியசாமி- சேட்டுக்கிடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சேட்டு ரோட்டில் நடந்து சென்றபோது, பெரியசாமி வீட்டில் வளர்த்து வரும் நாய் குரைத்துள்ளது. இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த சேட்டுவின் மகன்கள் ரவி, லட்சுமணன் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த பெரியசாமியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சேட்டு மற்றும் அவரது மகன்கள் 2 பேரை கைது செய்தனர்.

Related Stories:

>