×

மின்விநியோகம் தனியார் மய நடவடிக்கை நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்

மன்னார்குடி, பிப்.3: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்த நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், நாடு முழுவதும் மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அகில இந்திய மின் வாரிய பட்டயப் பொறியாளர்கள் சம்மேளன தென் மண்டல தலைவர் சம்பத் கூறுகையில், உலக வல்லரசுகளுக்கு இணையாக நாம் வளர வேண்டுமெனில் நம் பொதுத் துறை கட்டமைப்புகள் உறுதியுடன் இருக்க வேணடும். கடந்த சில வருடங் களுக்கு முன்பு பொருளாதார வீழ்ச்சியால் பல நாடுகள் வீழ்ந்தபோது நாம் நிமிர்ந்த நின்றதன் காரணம் பொதுத் துறை வங்கிகள் உட்பட நம் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் தான். நாட்டின் சொத்தாக பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவியதன் நோக்கம் பின்னாளில் தனியாருக்கு விற்று பிழைக்க அல்ல, அதன் கட்டமைப்பை வலுவாக்கி வருமானம் பெருக்கி நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால், துரதிஷ்டவசமாக தற்போது பட்ஜெட் பற்றாக் குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை மத்திய அரசு விற்க ஆரம்பித்து இருப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவது போலாகும்.

இப்போது பட்ஜெட் அறிவிப்பில் ஏர் இந்தியா, வங்கிகள், எண்ணை நிறுவனங்கள், மின்சாரம் போன்ற முக்கிய துறைகள் தனியார் மயமாகும் என்கிற அறிவிப்பு நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக ஆக்கி உள்ளது. மின் துறையை தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை நிறை வேற்ற கூடாது என அனைத்து மாநில மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தமிழக அரசு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது என அறிவித்தும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் , விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு சம்பத் கூறினார்.

Tags : country ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!