×

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, பிப்.3: எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து மன்னார்குடி ஆயுள் காப்பீட்டு கழக அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில்தாக்கல் செய்த பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமாக ரூ.2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்போவதாக அறிவித்திருந்தார். இதில், எல்ஐசியின் பங்குகளை விற்பதன் மூலமாக மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் எதிர்பார்க்கிறது என மத்திய நிதிதுறை செயலாளர் ராஜிவ் குமார் கூறியுள்ளார். இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முதல் கட்டமாக ஊழியர் சங்கத்தினர் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து மன்னார்குடி எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டி த்தும் முகவர் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், திருமாவளவன், ஊழியர் சங்க செயலாளர் அப்துல் ரசாக், வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி வெங்கடேசன், முதுநிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் எல்ஐசி கிளை அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில் முதுநிலை அதிகாரிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் மகேந்திரன், லியாபி முகவர் சங்க தலைவர் செல்வகுமார், லிகாய் முகவர் சங்க கோட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : LIC ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...