×

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பெருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருக்காட்டுப்பள்ளி, பிப்.3: திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார திருப்பதிகப்பாடல்கள் பெற்ற சிவத்திருத்தலம் ஆகும். இங்கு ஆண்டு தோறும் கும்பாபிஷேக தினத்தில் திருக்கல்யாண பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31ம் தேதி மாலை கணபதி வழிபாடு, முதல் காலயாக பூஜைகள் நடந்தது. 1ம் தேதி காலை சுவாமி அம்பாளுக்கு பால், தயிர், நெய், தேன், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து, ருத்ர ஹோமம், மஹா பூர்ணாகுதி, கலசாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. மாலை சவுந்தரநாயகி அம்பாள் பிறந்த ஊராக கருதப்படும் நாகாச்சி கிராம கரைகாரர்கள் பெண் வீட்டார் சீர் எடுத்து வந்து திருக்கல்யாண விழாவில் கலந்து கொண்டனர். இரவு புதுச்சத்திரம் நாராயணசாமி மற்றும் திருக்காட்டுப்பள்ளி ராஜா குழுவினர் நாதஸ்வர கச்சேரியுடன் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை அரியூர் சிவஆகம விற்பன்னர் முத்துக்குமாரசிவம் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள் குமார்குருக்கள், கிரிகுருக்கள் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுதாஅக்னீஸ்வரர் வழிபாட்டு குழுவினர் செய்தனர். இரவு ஆலயத்தில் சுவாமி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Swami Darshan ,Tirukkattupalli Agneeswarar Temple ,
× RELATED குருவாயூர், திருப்ரையார் கோயில்களில்...