×

வங்கிகள் கடனுதவி வழங்க மறுப்பு புதிய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்

புதுக்கோட்டை, பிப். 3: வங்கிகள் கடனுதவி வழங்கவில்லை. புதிய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டுமென புதுகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தனபதி (இந்திய விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர்): மழையளவு கடந்த சில ஆண்டுகளாக குறைவாக தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில் எதனால் குறைந்து வருகிறது என கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தைல மரங்களால் வனத்துறை தண்ணீர் தேங்கு குழிகளால் மழைநீர், நீர்நிலைகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் மழைப்பொழிவு அதிகமாகவும், பிற பகுதிகளில் மழை இல்லாததாலும் நீர்நிலைகள் வறண்டு விட்டன என்றார்.

பொதுப்பணித்துறை அதிகாரி பேசுகையில், 1131 நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. 740 நீர்நிலைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது என்றார். கந்தர்வகோட்டை பவுன்ராஜ்: பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் புதிய விவசாயிகளுக்கு கடனுதவியை வங்கிகள் தரவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.

செல்லதுரை (தென்னை விவசாயிகள் சங்கம்): 20 மணி நேர மின்சாரம் தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரைத்து கூட கடிதம் எழுதியும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கிராம நிர்வாக அலுவலகங்களில் பயிர் காப்பீடு தொடர்பாக விபரங்கள் அடங்கிய பட்டியலை தகவல் பலகையில் ஓட்ட வேண்டும். அத்தானி ராமசாமி, (கல்லணை கால்வாய் பாசனதாரர் சங்கம்): நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் மீன் வளர்ப்பை காரணம் காட்டி தண்ணீரை திறந்து விடக்கூடாது என பொதுப்பணித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் கோடை வரை விவசாயத்துக்கு உதவ வேண்டும். ராமதீர்த்தார் (விவசாயி): விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் நிலையில் தமிழக முதல்வர் அதை ஆதரிக்க கூடாது என்றார்.

கலெக்டர் உமா மகேஸ்வரி: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 152.445 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகள், 48.40 மெ.டன் பயறு விதைகள், நிலக்கடலை 65.75 மெ.டன், சிறுதானியங்கள் 10.094 மெ.டன், எள் விதைகள் 3.211 மெ.டன் விதைகள் இருப்பில் உள்ளது. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று சாகுபடி செய்து பயனடையலாம். விவசாயிகளுக்கு தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் யூரியா 5,252 மெ.டன், டிஏபி 995 மெ.டன், பொட்டாஷ் 3,054 மெ.டன், காம்ப்ளக்ஸ் 4,364 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காப்பீட்டு தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மார்ச் 1ம் தேதியாகும். மக்காச்சோள பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை எக்டேருக்கு ரூ.889 ஆகும். காப்பீட்டு தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு வரும் 15ம் தேதியாகும். நிலக்கடலை பயிர் பிரீமியத்தொகை எக்டேருக்கு ரூ.921 ஆகும். காப்பீட்டு தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு வரும் 15ம் தேதியாகும்.
உளுந்து பயிருக்கு பிரீமியத்தொகை எக்டேருக்கு ரூ.613 ஆகும். காப்பீட்டு தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு வரும் 15ம் தேதியாகும். எள் பயிருக்கு பிரீமியத்தொகை எக்டேருக்கு ரூ.265 ஆகும். காப்பீட்டு தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு வரும் 15ம் தேதியாகும். கரும்பு பயிருக்கு பிரீமியத்தொகை எக்டேருக்கு ரூ.6,422 ஆகும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார். கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன், சப் கலெக்டர் ஆனந்த்மோகன் , மாவட்ட வன அலுவலர் சுதாகர், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்