×

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கேட்டு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் 28 பேர் கைது

நாகர்கோவில், பிப்.3 : நாகர் கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெற்றுவருகின்ற ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனோ காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.  அரசு துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தடுத்திட வேண்டும்.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள நான்கரை லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளடக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயகுமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மூட்டா முன்னாள் மாநில தலைவர்  மனோகர ஜஸ்டஸ், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் லீடன் ஸ்டோன் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கிறிஸ்டோபர் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 28 பேரை போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தினையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : cancellation ,Government Employees Union ,
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்