சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1190 அதிகரித்து ஒரு கிராம் ரூ.16,800க்கும், பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியும் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனையானது.
இப்படியே விலை உயர்ந்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்க நகை என்பது எட்டா கனியாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதே நேரத்தில் இருக்கும் சூழ்நிலையை வைத்து பார்த்தால் தங்கம் விலை மேலும் அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனையாகி வருகிறது.
