×

திருநெல்வேலி ஆய்வு கூடத்திற்கு பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட உடற்கூறுக்கு லக்கேஜ் வசூலிப்பு போலீஸ் ஏட்டு அதிர்ச்சி

குளச்சல், பிப். 3:  போலீசார்,  ஆய்வு கூடத்திற்கு பஸ்சில் கொண்டு செல்லும்  பார்சலுக்கு  கண்டக்டர் டிக்கெட் கொடுத்ததால் போலீஸ் ஏட்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்தவரின்  உடற்கூறுகள் பரிசோதனைக்காக பாட்டில்களில் அடைத்து, அதனை சிறு  பார்சல் செய்து ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.  குமரி மாவட்டத்தில் விபத்தில்  இறப்பவர்கள், தற்கொலை, கொலை, சந்தேக மரணம் அடைந்தவர்களின் உடல்கள் பிரேத  பரிசோதனை செய்யப்பட்டு, உடற்கூறுகளை திருநெல்வேலியில் உள்ள ஆய்வு  கூடத்திற்கு போலீசார் கொண்டு செல்கின்றனர்.  இந்த பணிக்கு செல்லும்  போலீஸ்காரரின் பஸ் பயணத்திற்கு ‘வாரண்ட்’ கொடுக்கப்படுகிறது. அவர்கள் கொண்டு செல்லும் உடற்கூறு பார்சல்  குறைந்த எடை கொண்டது. ஆகவே அதற்கு ‘லக்கேஜ்’ கட்டணம் வசூலிக்கப்படுவது  இல்லை.  இந்த நிலையில் குளச்சல் காவல் நிலையத்தில், உடற்கூறு பார்சல் கொண்டு செல்லும்  பணிக்கு நேற்று முன்தினம்  ஏட்டு ராஜேஷ் சென்றார். அவர் பைக்கில் நாகர்கோவில் வடசேரி  சென்று அதன் பிறகு திருநெல்வேலி செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது போலீஸ் ஏட்டு ராஜேஷ் பயணத்திற்கான ‘வாரண்டை’ காட்டினார். அதை கண்டக்டர்  ஏற்றுக்கொண்டார். ஆனால் உடற்கூறு பார்சலுக்கு ‘லக்கேஜ் டிக்கெட்’ எடுக்க  வேண்டும் என்று கூறினார்.

 இந்த பார்சல் எடை குறைவு. இதேபோல் இதற்கு  முன்பு பலமுறை கொண்டு சென்றுள்ளேன். ‘லக்கேஜ் டிக்கெட்’ கேட்டதில்லை என்று  ஏட்டு ராஜேஷ் கூறி இருக்கிறார். ஆனால் ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்லும்  பார்சலுக்கு ‘லக்கேஜ் டிக்கெட்’ எடுக்க வேண்டும் என்று கண்டக்டர்  கறாராக கூறியுள்ளார். இதை கேட்டதும் போலீஸ் ஏட்டு ராஜேஸ் அதிர்ச்சி  அடைந்தார். வேறு வழியில்லாமல் ‘லக்கேஜ் டிக்கெட்’ எடுத்து  திருநெல்வேலி ஆய்வு கூடத்துக்கு சென்று வந்துள்ளார். இந்த சம்பவம் குளச்சல்  காவல் நிலையத்தில் போலீசார் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.

Tags : laboratory ,Tirunelveli ,
× RELATED 12 முதல் 17 சதவீதம் வரை பிளாஸ்டிக்...