×

டி.சுப்புலாபுரம் நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டம் துவக்கம் புதிய கூலி உயர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

ஆண்டிபட்டி, பிப்.3: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த கோரி நேற்று முதல் நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. நெசவு தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்தது. இதனால் புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, 13 சதவீதம் கூலி உயர்வு வேண்டும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால், விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 13 சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு நூல் விலை உயர்வை கண்டித்து  விசைத்தறி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நூல் விலை உயர்வை காரணம் காட்டி, பழைய கூலி ஒப்பந்தத்தில் தான் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று உரிமையாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் இந்த கூலி உயர்வு பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் விசைத்தறி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும் என்று பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை மறியல் மற்றும் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தினர். பின்னர் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல்  டி.சுப்புலாபுரம் கிராமத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி என ஏராளமான தொழிற்சங்கங்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Tags : D. Subbulapuram ,weavers ,hunger strike ,wage hike ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...