×

அடிப்படை வசதிகள் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை தேவதானப்பட்டியில் பரபரப்பு

தேவதானப்பட்டி, பிப்.3: தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு பூட்டுபோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கக்கன்ஜி நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் கடந்த 15 வருடங்களாக செய்யப்படவில்லை. இது குறித்து பல முறை போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மஞ்சளாறு அணையை பாசனத்திற்கு திறப்பதற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் வந்திருந்தார். அப்போது கக்கன்ஜி நகர் பெண்கள் கலெக்டரை முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டர்  முற்றுகையிட்ட பெண்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டார். உங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்துவிட்டு சென்றார். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த கக்கன்ஜிநகரை சேர்ந்த ஏராளமான பெண்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு பூட்டுபோட வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார், தாசில்தார் ரத்னமாலா பேச்சுவார்த்தை நடத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் கூறுகையில், கக்கன்ஜி நகரில் அடிப்படை வசதிகள் செய்ய வேலைக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பணிகள் தொடங்கிவிடும் என கூறினார். இதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : siege ,municipality office ,Devadanapatti ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி