ஜவ்வரிசி வியாபாரிக்கு அல்வா தந்த 2 பேர் கைது

திண்டுக்கல், பிப்.3: ஜவ்வரிசி வியாபாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெங்கபாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார்(29). இவர் ஜவ்வரிசி மொத்த கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் கோவையை சேர்ந்த பரமசிவம் என்பவர் சரத்குமாரிடம் தனக்கு 10 டன் ஜவ்வரிசி வேண்டும், அதை திண்டுக்கல் அருகே காவேரி நகருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரும் கடந்த மாதம் 10 டன் ஜவ்வரிசியை மொத்தமாக அனுப்பி வைத்தார். சரக்குகளை பெற்றுக் கொண்டபின் பரமசிவம் அதற்கான தொகை ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் தர வேண்டியிருந்தது. ஆனால் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சரத்குமார் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் கோவையை சேர்ந்த பரமசிவம் (32) முகம்மது மாலிக் (52) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான எபினேசர் நாதன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>