×

கலெக்டர் அலுவலகம் முற்றுகை 265 அரசு ஊழியர்கள் கைது

கோவை, பிப்.3: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், 265 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாநிலம் முழுவதும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் மதிப்பூதியம் தொகுப்பூதியம் ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட  214 பெண்கள் உட்பட  265 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போராட்டகாரர்கள் கூறுகையில், ‘‘புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசிடம் 33 முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை நிராகரிப்பதோடு மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தி வருகிறது. உடனடியாக தமிழக அரசு எங்கள் நிர்வாகிகளை அழைத்துப் பேசி உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர்.

Tags : Collector ,siege ,Government ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...