×

ஆன்லைனில் விளைபொருட்கள் வாங்கி மோசடியால் விரக்தி காவல் நிலையத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

அன்னூர், பிப்.3:  ஆன்லைன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை `நித்திரா விவசாயம்’ என்ற செல்போன் செயலி மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, அந்தியூர், சேலம், கோபி மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஆன்லைன் ஆப்பை பயன்படுத்தி விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த 23ம் தேதி அன்னூரில் நிறுவனம் நடத்தி வரும் சுந்தரராஜ் என்பவர், `நித்திரா விவசாயம்’ ஆப்பில் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் உதவியுடன் 4800 கிலோ உளுந்தை ரூ.3 லட்சத்திற்கு கொள்முதல் செய்துள்ளார். அந்த பணத்தை பெற உளுந்து வரும் வாகனத்திலேயே ராஜேஷை வருமாறு சுந்தர்ராஜ் கூறி உள்ளார். 23ம் தேதி இரவு நேரமாகி விட்டதால் பணம் தர முடியாது என கூறி காசோலை கொடுத்துள்ளார். ஆனால், அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது. இதனால் ராஜேஷ் ஆத்திரமடைந்து சுந்தர்ராஜிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு சுந்தர்ராஜ், உன்னால் முடிந்ததை செய் எனக்கூறி தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து ராஜேஷ் அன்னூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். இந்நிலையில், நேற்று காவல் நிலையத்துக்கு சென்ற ராஜேஷ் திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷிடம் சுந்தர்ராஜ் ரூ.3 லட்சமும், அந்தியூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் சின்னவெங்காயம் வாங்கியதில் ரூ.2 லட்சமும், சேலத்தை சேர்ந்த சசிகுமாரிடம் மக்காச்சோளம் வாங்கியதில் ரூ.5 லட்சமும், பென்னாகரம் பகுதியில் வரமிளகாய் வாங்கி அருள் என்பவரிடம் ரூ.6 லட்சமும் என பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.  இதுதொடர்பாக, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை தேடி வருகின்றனர்.

Tags : police station ,Valipar ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...