×

ஈரோடு விண்ணப்பள்ளி கிராமத்தில் 800 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

ஈரோடு,  பிப். 3:  புஞ்சைபுளியம்பட்டி அடுத்துள்ள விண்ணப்பள்ளி கிராமத்தில் 800  ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் சாலையில்  அமைந்துள்ள விண்ணப்பள்ளி கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான இரண்டு  நடுகற்களையும், கி.பி. 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு நடுகல்லையும்  கண்டறிந்துள்ளனர். இது குறித்து திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன்  தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் ரவிக்குமார் கூறியதாவது: பண்டைய ஓடுவாங்க நாட்டில் கங்க நாட்டுப் பெருவழியில் அமைந்திருந்த ஊர்தான் விண்ணப்பள்ளி. பொதுவாக பள்ளி என்ற விகுதியுடன் கூடிய இடப்பெயர்கள் சமண  சமயத்துடன் தொடர்புடைய ஊர் பெயர்களாக கருதப்படுகின்றன. ஆனால், கொங்கு  மண்டலத்தில் எல்லா ஊர் பெயர்களையும் சமண சமயத்துடன் தொடர்புபடுத்திவிட  முடியாது. வடதமிழ்நாட்டில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் பள்ளி என்று  முடியும் ஊர் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அந்த நடுகற்கள் மாடு பிடி  சண்டையில் மாண்ட வீரர்களுக்கு எடுக்கப்பெற்றவை. இங்கு பள்ளி என்பது கால்நடை  வளர்ப்பில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மக்களைக் குறிக்கும்.

  மேலும்  பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாகத்தில் “காவும் பள்ளியும்” என்று  குறிப்பிடும் போது, பள்ளி என்பது கால்நடை மேய்ப்போர் குடியிருப்பு என்று  நச்சினார்க்கினியார் குறிப்பிடுவார். எனவே நமது விண்ணப்பள்ளி கிராமம்  பண்டைய காலத்தில் கால்நடை வளர்ப்பு செய்தவர் குடியிருப்பாக இருந்திருக்க  வேண்டும். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் கால்நடைகளைக் காக்க போரிட்டு  மாண்ட வீர மறவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட மூன்று நடுகற்கள் நமக்கு  கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : plants ,Vinnapalli ,Erode ,village ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!